சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் 13 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சாந்தி (57). இவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி இறந்து விட்டார். சாந்தி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் உள்ள கேபிள் டிவி சில நாட்களாக பழுது அடைந்து இருந்தது. ஆகவே சாந்தி கேபிள் டிவி ஆப்ரேடரிடம் தகவல் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் கேபிள் டிவி பழுது நீக்க வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4 வது தெரு 1வது பிளாக்கை சேர்ந்த மோகன் வயது 46.  சாந்தியை மொட்டை மாடிக்கு போய் டிஷ் அண்டனாவை திருப்பும் படி கூறியுள்ளார். சாந்தி மாடிக்கு சென்றவுடன்  வீட்டில் பீரோவில் இருந்த ரூபாய் 40 ஆயிரம் 4 சவரன் செயின் திருடிக் கொண்டு டிவி பழுது நீக்கி விட்டதாக கூறி சென்று விட்டுள்ளார்.




சாந்தி கிழே வந்து பார்த்த போது பீரோவில் இருந்த பணமும் நகையும்  காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜன் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில்  கேபிள் டிவி ஆபரேட்டர் மோகன் , இவருக்கு உடந்தையாக இருந்த தண்டையார் பேட்டை  இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து வயது 31, திருவள்ளூர் , லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ராஜா வயது 35 இவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 சவரன் செயின் 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த  3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



 

செல்போன் பறிக்க முயன்ற இரு வாலிபர்களை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த மூவர்

 



 

சென்னை வியாசர்பாடி, பி.பி சாலை நான்வது தெருவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மொபைல் போன் பறிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கார்த்திக் , மணிகண்டன் மற்றும் கார் ஓட்டுனர் வதன் ஆகியோர் வாலிபர்கள் இருவரையும் லாவகமாக மடக்கி பிடித்து, வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மொபைல் பறிப்பில் ஈடுபட முயன்ற பெரம்பூரைச் சேர்ந்த இம்ரான் (21) , அயனாவரத்தைச் சேர்ந்த ஜீனேஸ்வரன் (18), ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 



அவர்களிடமிருந்து 5 விலையுயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப் பட்டது. மொபைல் போன் திருடர்களை , சாதுர்யமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த  ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் மூவரையும்  புளியந்தோப்பு சரக துணை ஆணையாளர் காவல் நிலையம் அழைத்து சன்மானம் அளித்து வெகுவாக பாராட்டினார்.