Chennai Rains: சென்னையில் மழை வெளுத்து வாங்குமா? - 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வீட்டுக்கு செல்வோர் அவதி
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையின் சில இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் திடீர் மழை
தமிழகத்தின் சென்னை புறநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் கடுமையான வெயில் அடித்த வந்ததால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், நேற்று முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தற்போது, சென்னையில் திடீரென மழை பெய்தது. ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்து வருவதால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தின் சென்னை புறநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் மியான்மர் கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மியான்மர் - வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16% கூடுதல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 16% கூடுதலாக பெய்துள்ளதாகவும், இயல்பான நிலையில் 201.9 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 234.5 மி.மீ., மழை பெய்துள்ளதாகவும் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 9% கூடுதலாக பெய்துள்ளதாகவும் இயல்பான நிலையில் 325.4 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 354.9 மி.மீ., மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.





















