தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் பல இடங்களில் மழைநீர் தொடர்ந்து பெய்து வருகிறது.



ஸ்ரீமன் வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்:


மழைநீர் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சென்னையின் பல இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பல இடங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஸ்ரீமன். இவர் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். கோடம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், இவர் கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்து தனது குடும்பத்தினருடன் வேறு ஒரு பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டைக் காலி செய்த ஸ்ரீமன்:


இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியிருப்பதாவது, “ வேற வழியில்லை சார். ஓரளவுக்கு கணித்து தகவல் அளித்துவிட்டனர். இவ்வளவுதான் தண்ணீர் வரும் என்று நமக்கு எப்படி தெரியும். என் வீட்டின் உள்ளே தண்ணீர் உள்ளே வரத் தொடங்கிவிட்டது. இன்னொரு இடம் இருப்பதால் மாறிவிட்டோம். தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் ஒன்றும் பண்ண முடியவில்லை. யாரையும் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் ஏதாவது செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று தெரியவில்லை. ஒரு நாளுக்கு பெய்துள்ள மழையே 20 நாட்களுக்கான மழை பெய்துள்ளது. இந்த பணிகள் இன்னும் வேகமாக முடிந்துவிட்டால் எதிர்காலத்தில் தப்பிக்கலாம். முழுமையான நகரத்திலும் பணிகள் முடிக்கலாம். எத்தனை பேருக்கு போவதற்கு மற்ற இடம் இருக்கும் என்று தெரியவில்லை. குறை சொன்னால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அடுத்த வருஷம் இது இல்லாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.”


இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையின் முக்கிய நகரங்களான வடபழனி, கோடம்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாசாலை, பெரம்பூர், மணலி, வியாசர்பாடி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.  சென்னையில் பெய்த மழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கிறது.