தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இடையில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.


கொட்டித் தீர்த்த கனமழை:


வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. ஓரிரு தினங்களுக்கு முன்பும் மழை கொட்டித் தீர்த்த நிலையில், நேற்று இரவும் மழை சென்னையில் கொட்டித் தீர்த்தது.


நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை பல பகுதிகளிலும் விடாமல் பெய்தது. கோயம்பேடு, அண்ணாநகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, ஆலந்தூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம் என நகரின் பல பகுதிகளிலும் மழை விடாமல் பெய்தது.






வெள்ளக்காடாய் மாறிய சென்னை:

திடீரென இடி மற்றும் பலத்த காற்றுடன் இந்த மழையால் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், வானக ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் வெள்ளம்போல ஓடியது. அண்ணாநகரின் சில பகுதிகள், ராயப்பேட்டையில் உள்ள சில பகுதிகள் என சென்னையின் பல சாலைகள் தண்ணீரில் தத்தளித்தது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


சென்னையில் நேற்று அதிகபட்சமாக அம்பத்தூரில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியது. வானகரம், மணலியில் 12 செ,.மீட்டர் மழை பதிவாகியது. அண்ணாணநகரில் 11 செ.மீட்டர் மழை பதிவாகியது. ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் மணலியில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியது. தற்போது மீண்டும் மணலியில் 12 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


10 மணி வரை இப்படித்தான்:


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.  சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.  மழைநீர் வெள்ளம்போல சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,