தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று காலை ஓரளவு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளிலும் கருமேகம் சூழ்ந்தது. பலத்த காற்று வீசியது. சரியாக பத்து முப்பது மணி அளவில் துவங்கிய மழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. கோடை மழை என்பதால் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

 

இதையடுத்து,  சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி. கொளத்தூர், கொரட்டூர். வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, ஆலந்தூர் என பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நாட்களாக வெயிலில் வாடி வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை இதமாக அமைந்துள்ளது. அதேசமயம், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள்.




இதேபோல சென்னையின் புறநகர்ப் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஆலந்தூர், மீனம்பாக்கம், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு, வேலப்பன்சாவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.  கனமழையால் பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

சாய்ந்த மரம்

 

சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. வெஸ்ட் மாம்பலம், டி நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலை நேரம் என்பதால் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




 

வெப்பச் சலனம்

 

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.