சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழை  காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. துபாய், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 2 பயணிகள்  விமானங்கள், துருக்கி நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று ஆகிய 3  விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய தோகா, துபாய், லண்டன், சார்ஜா, அந்தமான்  உள்ளிட்ட 10  விமானங்கள் தாமதம் அடைந்தன.

 

சென்னை விமான நிலையம்

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 11 மணியிலிருந்து, இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு, பலத்த காற்று, இடி மின்னலுடன், கனமழை பெய்தது. இந்த நேரத்தில் துருக்கி நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று, நேற்று இரவு 11:45 மணிக்கு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இடி, மின்னல் பலத்த மழை காரணமாக, விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

 

அதன்பின்பு இன்று அதிகாலை 3:40 மணிக்கு சார்ஜாவில் இருந்து, 168 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் அதிகாலை 3:50 மணிக்கு துபாயிலிருந்து 238 பயணிகளுடன் சென்னை வந்த ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி அனுப்பப்பட்டன. அதைப்போல் சென்னையில் இருந்து தோகா, துபாய், லண்டன், சார்ஜா, மற்றும் அந்தமான் புறப்பட வேண்டிய சுமார் 10  விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளார்கள்.

 


வெளுத்து வாங்கும் மழை:


சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், , அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு,  புறநகர்ப் பகுதிகளான அம்பத்துார், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. 



 


மகிழ்ச்சியும் - அவதியும்:


3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை பெய்து வருவதால், பகல் நேரங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக வாட்டி வதைத்து வரும் வெய்லின் தாக்கம் குறைந்துள்ளது. சில்லென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கோள்பவர்கள் உள்ளிட்டோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


பிற மாவட்டங்களில் மழை:


சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மற்ற வடமாவட்டங்களிலும் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.