சென்னை விமான நிலையத்தில், கனமழையின்போது விமானங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


வடகிழக்கு பருவமழை


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வேகம் எடுத்து வருகிறது. இதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றிலிருந்து, பலத்த மழை எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதற்கு ஏற்ப சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் இருந்து விட்டு விட்டு, மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்திலும், விமான சேவைகளை தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 


சென்னை விமான நிலையம்


சென்னை விமான நிலையத்தில் இன்று, விமான சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை 9 மணியிலிருந்து, இன்று மாலை 3 மணி வரையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு விமானங்கள் 34 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளன. இதில் சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சர்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள்.


சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றுவது, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் விமானங்களில் ஏற்றுவது, போன்றவைகள் தாமதம் ஆவதால், இந்த விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.


நடவடிக்கைகள் என்னென்ன ?


அதுமட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு வானிலை நிலவரத்தை கேட்டு அறிந்து, அதற்கு ஏற்ப விமானங்கள் புறப்பட்டு செல்வதால், புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் ஏ டி ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள், சூறைக்காற்று நேரங்களில், வானில் பறப்பது பாதுகாப்பு இல்லாதது. எனவே அதைப் போன்ற சிறிய விமானங்களும், பாதுகாப்பு கருதி, சென்னை விமான நிலையத்திலிருந்து தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. 


இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து வெளியிட்டு வரும், வானிலை பற்றிய அறிக்கைகளை கவனமாக ஆய்வு மேற்கொண்டு, விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இன்றைய தினம் பெரிய அளவில், இதுவரை விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. ஒரு சில நிர்வாக காரணங்கள் காரணமாக, சில விமானங்கள், குறைந்த அளவு நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 


நாளைய தினமும் செவ்வாய்க்கிழமையும் இதுவரையில் விமான சேவைகள் இயக்கத்தில் மாற்றம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் கனமழை, சூறைக்காற்று போன்றவைகள் அதிகமாக இருக்குமேயானால், அந்த நேரங்களில் பாதுகாப்பு கருதி, விமான சேவைகள் இயக்கங்கள் மாற்றி அமைக்கப்படும். அவ்வாறு விமான சேவைகளில் மாற்றங்கள் ஏதாவது இருக்குமேயானால், பயணிகளுக்கு உடனுக்குடன் அந்தந்த விமான நிறுவனங்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும். எனவே நாளைய தினம் விமானங்களில் பயணிக்கும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களில், விமானங்கள் புறப்படும் நேரங்களை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்களுடைய பயணத்தை அமைத்துக் கொள்வது நல்லது.


மேலும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் போது, வந்து தரையிறங்கும் போது,ஓடு பாதைகளில், விமானங்கள் ஓடும் போது, ஒடு பாதைகளில், தண்ணீர் தேங்காத வண்ணம், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விமானங்களையும் குறித்த நேரத்தில் பாதுகாப்பாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.