சென்னையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வைரல் வீடியோ:
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராக பணி செய்கிறார் ராஜேந்திரன். இவர் பேசிய ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜேந்திரன், வாட்ஸ்-அப் குரூப் ஒன்றில் கிறிஸ்டோபர் என்பவர் கிறிஸ்தவ பாடல் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்துவிட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஆடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸில் பகிர்ந்துள்ளார்.
"சிறு தண்ணீரை மாற்றுத்திறனாளிகள் மீது தெளித்தவுடன் எழுந்து நடப்பார்கள் என பாடல் வரிகளில் உள்ளது. ஆனால் அது போன்று நடக்குமா? எனவே இது போன்ற பாடலை எல்லாம் அனுப்பக்கூடாது. மேலும் இது இந்திய நாடு, ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டி உள்ளோம். இந்தியாவில் உள்ளவர்கள் தான் பூஜை செய்வார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்போம்; கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள்.
இங்கு முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகளில் சென்று படிங்கள். எங்களுக்கு பிடிக்குது நாங்கள் நடத்துகிறோம். இந்தியாவில் 80% இந்துக்கள், மற்ற 20% மட்டுமே முஸ்லீம், கிறிஸ்துவர்கள். யாரு மெஜாரிட்டியோ அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். ஆகையால் இது போன்ற பாடல்களை எல்லாம் பரப்பாதீர்கள். இங்கு ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்" என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் துறை, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.