பொங்கல் கொண்டாட்டம் - குடும்பத்துடன் சென்ற பைனான்ஸியர்

சென்னை போரூர் ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வரும் இளவரசன் ( வயது 36 ) என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த ஊரான ஒட்டன் சத்திரத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக, கடந்த 11.01.2026 அன்று இரவு குடும்பத்துடன் பேருந்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

மறுநாள் , அவரது உறவினர் செல்போனில் தொடர்பு கொண்டு இளவரசனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக தெரிவித்ததின் பேரில், உடனடியாக இளவரசன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு, இரவு சென்னைக்கு வந்து வீட்டை பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.13,20,000 , 8 ¼ சவரன் எடையுள்ள 3 தங்க நாணயங்கள், 1 தங்க காப்பு , தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளி வளையல்கள், தோடு, டாலர், ஆரம், 2 கைக் கடிகாரங்கள், ஆப்பிள் Airpod, 1 செல்போன் மற்றும் கருங்காலி மாலை ஆகியவை திருடு போயிருப்பதாக இளவரசன் வானகரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் , போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வானகரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா (எ) கிளி சூர்யா ( வயது 25 ) , செங்குன்றம் பகுதியை சேர்ந்த முரளி (எ) குசுமி முரளி, ( வயது 24 ) , புழல் பகுதியை சேர்ந்த டில்லிபாபு ( வயது 28 ) இவரது மனைவி வாணி ( வயது 22 ) யுவஸ்ரீ ( வயது 20 ) , ஆர்த்தி ( வயது 22 ) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பணம் ரூ.2 இலட்சம், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் , கொடுத்த தகவலின் பேரில், சூர்யா, முரளி, டில்லி பாபு ஆகியோர் சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனங்களில் சென்று நோட்டமிட்டு, புகார் தாரரின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் எலக்டிரானிக் பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் சூர்யா என்பவர் மீது ஏற்கனவே 57 திருட்டு வழக்குகளும், முரளி மீது சுமார் 18 குற்ற வழக்குகளும், டில்லிபாபு மீது 22 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 6 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.