ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் மலிவு விலை வீட்டு மனைகள் தருவதாகக் கூறி, சக காவலர்கள் மற்றும் பொது மக்களிடம் சுமார் 20 கோடி வரை பண மோசடி செய்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது

மக்களிடம் பணம் வசூல்
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் ஷீலா மேரி. இவரது கார் ஓட்டுநரும், உறவினருமான பிரபு என்ற பிரபுமணி, கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்த நிறுவனத்தின் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், குறைந்த விலையில் தங்கக் காசுகள் வாங்கித் தரப்படும், வீட்டு மனைகள் மலிவு விலையில் பெற்றுத் தரப்படும் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
பொது மக்கள் முதல் அதிகாரிகள் வரை
இந்த நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, ஆய்வாளர் ஷீலா மேரி பயன்படுத்திய காவல் துறை வாகனத்திலேயே சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்து தங்கக் காசுகளை வழங்கி பிரபுமணி நம்பிக்கை ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் பொது மக்கள் மட்டுமின்றி, காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், காவலர்கள், அவர்களது குடும்பத்தினரும் கோடிக் கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர். காவலர்கள் மட்டும் அல்லாமல் எஸ். பி வரையிலான அதிகாரிகளும் பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
இதற்கிடையே , 2024-ம் ஆண்டு இறுதியில், தங்க காசுகள் வியாபாரம் செய்யும் நபர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், முதலீடு செய்த பணத்தை தனது சொத்துகளை விற்று தருகிறேன் என்றும் முதலீட்டாளர்களிடம் பிரபு மணி கூறியுள்ளார்.
இதை முதலீட்டாளர்களும் நம்பியிருந்தனர். இந்நிலையில், திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவானார். இதையடுத்து, ரூ.8 கோடியே 17 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக 56 பேர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
விசாரணையில், மொத்த மோசடி தொகை ரூ.20 கோடியை எட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடந்த மாதம் 9-ம் தேதி பிரபுமணியை கைது செய்தனர்.
பிரபுமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆய்வாளர் ஷீலா மேரியும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, கைதுக்குப் பயந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஷீலா மேரிமனு தாக்கல் செய்தார். ஆனால், அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஷீலா மேரி, நிறுவன நிர்வாகிகளாக செயல்பட்ட கொடுங்கையூர், விவேகானந்தன் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 41), அதே பகுதி கவியரசு கண்ணதாசன் நகர் மீனம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்த கல்பனா ( வயது 31) ஆகிய 3 பேரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஷீலா மேரி, பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள், திருமண மண்டபங்கள், கல்குவாரி, வாகனங்கள் உள்பட பல்வேறு சொத்துகளை தனது பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை மோசடி பணத்தில் வாங்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















