சென்னையில், பிட் புல் நாய் கடித்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தெரு நாய்கள் பிரச்னை பெரிதாக வெடித்துள்ள நிலையில், தற்போது, வளர்ப்பு நாயான பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

பிட்புல் நாய் கடித்து ஒருவர் பலி - வளர்த்த பெண்ணையும் கடித்தது

சென்னை குமரன் நகர் பகுதியில், பூங்கொடி என்பவர், தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். அந்த பிட்புல் நாய் கருணாகரனின் தொடை, இடுப்பு பகுதியில் கடித்து குதறியுள்ளது. இதையடுத்து அவர் உயிரிழந்துள்ளர்.

தன்னுடைய வளர்ப்பு நாயான பிட்புல் கடித்ததில், பூங்கொடியும் படுகாயமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

மத்திய அரசு விதித்த தடை

கடந்தாண்டு மார்ச் மாதம் 23 ரக நாய்களை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த பட்டியலில், பிட்புல் ரக நாய்களும் அடக்கம். 

பிட்புல் ரக நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை என்பதால், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற அடிப்படையில், மத்திய அரசால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களை வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபமெடுத்த தெரு நாய்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு

ஏற்கனவே, தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நாடு முழுவதும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

மேலும், அந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில், விலங்கு நல  ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள், பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், வீட்டில் வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.