சென்னையில், மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் என, அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், அடுத்த மாதம் புதிய செயலியை அறிமுகம் செய்கிறது, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்(CUMTA).

Continues below advertisement

ஒரே டிக்கெட்டில் 3 விதமான போக்குவரத்துகளில் பயணம்

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக் கொண்டே வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, பொது போக்குவரத்தான பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த 3 விதமான போக்குவரத்துகளிலும் பயணம் செய்ய, இதுவரை தனித்தனியாகவே அவர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர். இந்த நிலையில், அனைத்து விதமான போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

இதற்காக தனியாக ஒரு செலியை உருவாக்க, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடட்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் புதிய செயலி அறிமுகம்

சென்னையில், மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட்டை பெறுவதற்கான புதிய செயலியை CUMTA அடுத்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியின் QR கோட் மூலம், அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயலியில் கூடுதல் வசதிகள்

டிக்கெட் பெறுவது மட்டுமல்லாமல், இந்த செயலி மூலம், எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் இந்த மூன்று வகை போக்குவரத்துகளிலும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், புதிய செயலி பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த செயலி பொதுமக்களிடையே நிச்சயம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகர பேருந்துகளில் தகவல் அமைப்பு

இதனிடையே, சென்னையில் உள்ள பேருந்துகளில் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்பட உள்ளத. அதாவது, தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் வந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.