சென்னையில் ஒரு குடும்பமே தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழந்த சோகம் - தந்தையின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன?
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
சென்னை பெரம்பூரில் வசித்து குடும்பத்துடன் வசித்து வந்தவர் செபாஸ்டின். இவரது மனைவி ரெக்ஸி பியூலா. இவர்களுக்கு குழந்தை ஆண்டோ, மகள் இவாஞ்சலின் (வயது 8) என இரண்டு பிள்ளைகள். சமீபகாலமாக ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால், செபாஸ்டின் மனவேதனையில் இருந்துள்ளார்.
இருவர் உயிரிழந்த சோகம்
இந்த நிலையில், நேற்று இரவு செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். 3 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு செபாஸ்டின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதில், குழந்தை ஆண்டோ உயிரிழந்த நிலையில் ரெக்ஸி பியூலா, இவாஞ்சலின் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இதேபோல் ஒரு சம்பவம்
கடந்த மாதம் இதேபோல், ஒரு தற்கொலை சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது. அரசு அதிகாரி ஒருவர் தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததால், தான், மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)






















