சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் போக்குவரத்துக்கு முக்கிய பலமாக இருப்பது மெட்ரோ சேவை ஆகும். மழைக்காலங்களில் மக்கள் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றிற்கு மாணவர்கள் சென்று வருவதற்கு மிகவும் பக்கபலமாக மெட்ரோ சேவை உள்ளது.
நடுவழியில் சிக்கிய மெட்ரோ ரயில்:
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் ஒரு வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை காலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டரை கடந்து உயர்நீதிமன்றம் மெட்ரோ செல்லும் வழியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறால் ரயில் நின்றது. மெட்ரோ ரயில் ஓட்டுனர் அதை சரி செய்ய முயற்சித்தார். ஆனால், அவரால் சரி செய்ய இயலவில்லை. பின்னர், மெட்ரோ நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.
சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள்:
மெட்ரோ திடீரென நடுவழியில் நீண்ட நேரம் நின்றதால் பயணிகள் அச்சத்திற்கு ஆளானார்கள். மேலும், மெட்ரோ ரயில் உள்ளே விளக்குகளும் அணைந்ததால் பயணிகள் மிகுந்த பீதிக்கு ஆளாகியுள்ளனர். அனைவரும் தங்களது கைகளில் இருந்த செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தியுள்ளனர்.
சுமார் அரைமணி நேரமாக சுரங்கப்பாதை உள்ளே மெட்ரோ ரயில் மாட்டிக் கொண்டதால் பயணிகளை மீட்பதற்கு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மெட்ரோ உள்ளே பயணிகள் சிக்கிக் கொண்டதால் அவசர கால கதவுகள் திறக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மெட்ரோ ரயில் ஓட்டுனர் மூலமாக அளிக்கப்பட்டது.
காரணம் என்ன?
காலை 5.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது அதிகளவு பயணிகள் மெட்ரோ ரயிலின் உள்ளே இல்லை. பின்னர், இந்த சம்பவம் சீரான பிறகு சுமார் 6.20 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல சீராக இயங்கி வருகிறது.
இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன? மழைக்காலத்தில் இதுபோன்று இனிமேல் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து மெட்ரோ நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.