சென்னை மாநகராட்சியின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் படி சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் திரு.வி.க சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாணவிகள் கராத்தே பயிற்சிகளை செய்தும், ஓடுகளை உடைத்தும் பயிற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மாணவிகள் உடன் இணைந்து காரத்தே பயிற்சி மேற்கொண்டு மாணவிகளை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ;
மாநகராட்சி நிதி ஆண்டு அறிக்கையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் தொடர்பாக 27 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் 14 வது அறிவிப்பாக உள்ள சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு கராத்தே கற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி இன்று அந்த திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை மாநகரட்சிக்குட்பட்ட ஆறு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனவும் ஒரு பள்ளிக்கு 50 மாணவர்கள் என்று 300 மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர விருப்பம் அளித்துள்ளனர் எனவும் கூறினார்.
இவர்களுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து குக்ஸ் ரோடு பள்ளி, மணிகண்டன் சாலையில் உள்ள பள்ளி, புத்தா ஸ்ட்ரீட் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி, வேளச்சேரி பள்ளி, கல்லடியின் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளின் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை முழுவதுமாக விரிவாக்கப்படும் என தெரிவித்தார்.
மணலியில் மாநகராட்சி உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 20 ஆசிரியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது குறித்தான கேள்விக்கு ,
மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கடந்த ஆண்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இதற்கு முன்பாக ஆட்சி நடத்தியவர்கள் சீர் செய்யவில்லை. சென்னையில் தற்போது சீர் செய்து வருகிறோம். ஒரு சில ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மெமோவிற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பதிலளித்த பிறகு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மெமோ கொடுக்கவில்லை எனவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர்களுக்கு மெமோ அளிப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. அந்த மெமோவிற்கு அவர்கள் பதில் அளித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.