சென்னை மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழின் இரண்டாம் கட்டமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்காக புத்தம்புது கண்கவர் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
அது என்ன நீலக்கொடி சான்றிதழ்?
டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் பல்வேறு கடற்கரை மதிப்பீடு செய்து, நீலக்கொடி சான்றிதழை வழங்கி வருகிறது. குறிப்பாக கடற்கரையில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை, தூய்மை நிலை, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள், சுற்றுச்சூழல் மேலாண்மை, தூய நீர் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் ஆய்வு செய்யப்படும்.
முன்னதாக தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் மெரினா கடற்கரையில் பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்காக புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
என்னென்ன வசதிகள்?
குறிப்பாக, மூங்கில் வேலைப்பாடுகள் அமைந்த அழகிய நுழைவு வாயில், மூங்கில் இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், சாய்வு இருக்கைகள், ஊஞ்சல்கள், ஆங்காங்கிய அழகிய நிழல் குடைகளுடன் கூடிய சாய்வு நாற்காலிகள், மூங்கில் குடில்கள் ஆகியவை அழகியலுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல ஆர்வமுள்ளோர் அமர்ந்து படிக்க படிப்பகங்கள், புகைப்படங்கள் எடுக்கும் வகையில் இதய வடிவில் போட்டோ பாயிண்ட், வெவ்வேறு வடிவிலான காளான் குடைகளுடன் கூடிய இருக்கைகளும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எப்போது திறப்பு?
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இந்தப் பணிகள் 4 கட்டமாக நடைபெற உள்ளன. முன்னதாக 2ஆம் கட்ட திறப்பு விழா பிப்ரவரி கடைசியில் நடக்கும் என்று கூறப்பட்டது. எனினும் தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த மாதத்தில் திறப்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அதேபோல சில்வர் பீச் (கடலூர்), காமேஸ்வரம் (நாகை), அரியமான் (ராமநாதபுரம்) மற்றும் சென்னை கடற்கரைகள் (திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி) உள்ளிட்டவை தரம் உயர்த்தப்பட உள்ளன.
இந்த நீலக்கொடி திட்டம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, நம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
