35 சவரன் நகை திருட்டு புகார்
சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையைச் சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் ( வயது 54 ) இவர் ஸ்ரீ பிர்வேந்திரா ஹோம் சர்வீஸ் அண்டு ஏஜென்சி என்ற நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( வயது 55 ) என்பவரின் மனைவி விஜயா ( வயது 50 ) வேலை செய்து வந்தார்.
கடந்த 2025 டிசம்பர் 22 - ல், மாடம்பாக்கத்தில் உள்ள சரோஜா என்பவரின் வீட்டிற்கு, விஜயாவை வீட்டு வேலைக்கு அனந்த பத்மநாபன் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 29 - ம் தேதி, 'வீட்டில் வேலை செய்து வந்த விஜயாவை காணவில்லை. 35 சவரனும் திருடு போயுள்ளது என சேலையூர் போலீசில் , சரோஜா புகார் அளித்துள்ளார்.
கழுத்தறுக்கப்பட்டு கொலை
விஜயாவை தொடர்பு கொண்ட போது அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நகை திருட்டு வழக்கில், விஜயாவை சேலையூர் போலீசார் தேடி வந்தனர். கடந்த, 29 - ம் தேதி, மேல்மருவத்துாரில் தங்கி இருந்த விஜயாவையும், அவரது கணவர் பன்னீர் செல்வத்தையும், சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
அதன் பின், விஜயா மற்றும் பன்னீர் செல்வத்தை பாதுகாப்பாக தங்க வைக்கும் படி, அனந்த பத்மநாபனிடம் போலீசார் ஒப்படைத்தனர். மீண்டும் 30 - ம் தேதி காவல் நிலையத்திற்கு வரவழைத்து விஜயாவிடம் விசாரித்து விட்டு, இரவில் அனந்த பத்மநாபன் இல்லத்தில் தங்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையை அனந்த பத்மநாபன் பார்த்த போது, விஜயா, பன்னீர்செல்வம் இருவரும் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர். தகவலின்படி, சம்பவ இடத்திற்கு அசோக் நகர் போலீசார் சென்றனர். அப்போது, விஜயா கழுத்தறுத்து கொல்லப்பட்டு கிடந்தார். பன்னீர்செல்வம் கழுத்தை அறுத்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
நானும் என் மனைவியும் தற்கொலை முடிவு
பன்னீர் செல்வத்தை மீட்ட போலீசார், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் , போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, நானும், என் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். மனைவி தான் கத்தியை எடுத்துக் கொடுத்தார். 'முதலில் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அதன் பின், என் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன். என்னால் என் கழுத்தை அறுக்க முடியவில்லை. இதனால் மயங்கி விழுந்து விட்டேன் என, கூறியுள்ளார். இச் சம்பவம் குறித்து, அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.