தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016ஆம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் 3170 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களில் 900 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டதாகவும், தகுதிபெற்ற மற்றவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


அதன்பின்னர், 2020ஆம் ஆண்டு 2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மீண்டும் அறிவிப்பு வெளியான நிலையில், கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடவடிக்கையை தொடரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.


ஆனால் கேங்மென் பணிக்கு 10000 பணியிடங்களுக்கு தேர்வானவர்களை கள உதவியாளர் பணிகளில் பணியமர்த்துவதாகவும், அதனால் விபத்துக்களில் அவர்கள் பலியாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


2016ல் அறிவிப்பாணைப்படி தேர்வாகி, நியமனம் வழங்கப்படாமல் உள்ளவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் 2017ல் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்களை, 2020ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ள காலியிடங்களில் நியமிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.


மேலும், தற்போது 5032 பணியிடங்களில் களஉதவியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், 29050 பணியிடங்கள் காலி உள்ளதாகவும், அவற்றில் 8000 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தேர்வு நடைமுறை நிலுவையில் உள்ளதால், மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், காலியிடங்களை நிரப்ப தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி.-யும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


அதுவரை விதிகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்தவர்களை பணி நிரந்தரம் கோர முடியாது என்ற நிபந்தனையுடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கள உதவியாளர் பணியில் கேங்மேன்களை பணியமர்த்தக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.