புதுச்சேரியில் எத்தனை பேருக்கு சட்டவிரோதமாக பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களுடன் நாளை நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதாக கூறி, புதுவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது,
இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து , அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புதுவை பொதுப்பணித்துறையில் 10 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக, முறையற்ற பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதால், அரசு உத்தரவை பின்பற்றியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிட்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, விருப்பம் போல், வேண்டப்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு உரிமையை மறுக்கும் செயல் என்று தெரிவித்து, புதுவை பொதுப்பணி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமங்களின் தன்மை, எத்தனை பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களுடன் நாளை ( 10ம் தேதி) நேரில் ஆஜராக அம்மாநில பொதுப்பணித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து சூறையாடப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், அதை திறக்க அனுமதிக்க கோரி வழக்கு.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ததாகவும், அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா போன்ற கேள்விகள் எழுப்பியுள்ளதாகவும், தங்கள் பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர, ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் எனவும் அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.
இதை ஏற்று, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.