தீபாவளி கொண்டாட குடும்பத்துடன் சேர போலீஸை ஏமாற்றி தப்பிய கைதி - சிக்கியது எப்படி?
சென்னையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள செய்திகளை காணலாம்.

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட போலீசிடம் இருந்து தப்பிய கைதி - மீண்டும் கைது
சென்னை சோழிங்கநல்லுார் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெல்சன் ( வயது 35 ). சில நாட்களுக்கு முன் இவரது இருசக்கர வாகனம் திருடு போனது. செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், சோழிங்க நல்லுார் ஏரிக்கரையை சேர்ந்த வினித்குமார் ( வயது 28 ) சரவணகுமார் ( வயது 27) ஆகியோர் , வாகனத்தை திருடியது தெரிந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இருவரையும் கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்தனர். இதற்காக, இரவு 8:00 மணிக்கு மூன்று போலீசார், இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனைக்கு காத்திருந்த போது, போலீசாரின் பிடியில் இருந்து வினித்குமார் தப்பியுள்ளார்.
அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிய போலீசார், எங்கும் கிடைக்காததால் , உயர் அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். பின்பு , சரவணகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து வினித்குமாரை தேடினர். விசாரணையில், மதுராந்தகத்தில் வசிக்கும் அவரது தங்கை வீட்டில் வினித்குமார் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
அதன்படி மதுராந்தகம் சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த வினித்குமாரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தப்பியது குறித்து போலீசாரிடம் வினிக்குமார் கூறியதாவது ;
குடும்பத்தார் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீபாவளிக்கு அவர்களுடன் இருப்பதாக சத்தியம் செய்திருந்தேன். கையில் பணம் இல்லாததால் பைக் திருடினேன். தீபாவளி முடிந்த பின் தான், போலீசிடம் சிக்குவேன் என நம்பினேன். அதற்குள் பிடிபட்டு குடும்பத்திற்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியவில்லையே வருத்தமாக உள்ளது. என இவ்வாறு கூறியுள்ளார்.
ஒப்பந்ததாரரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் வழிப்பறி
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் ( வயது 43 ) சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர். இவர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை, 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக நண்பரை அணுகியுள்ளார். அவர்கள் மூலம், திருவேற்காடு அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 25 ) ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த திருநாவுக்கரசு ( வயது 48 ) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இருவரும் ''கமிஷன்' அடிப்படையில் பணத்தை மாற்றி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக சுதாகர், தன் நண்பர்கள் கிஷோர் , சந்திரசேகரை அழைத்து கொண்டு காரில் 10 லட்சம் ரூபாயுடன் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் காரை மறித்து, கத்தி முனையில் 10 லட்சம் ரூபாயை பறித்து , அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து திருவேற்காடு போலீசில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மணிகண்டன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டது யார் , பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றாமல் ஏன் தனி நபரிடம் கொடுத்து மாற்ற வேண்டும் என்கிற கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.
காதலியை தாக்கிய காதலன் கைது
சென்னை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் தரணிதரன் ( வயது 29 ) இவரும் அம்பத்துார் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 5 - ம் தேதி இரவு, இளம் பெண்ணின் வீட்டிற்கு தரணிதரன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தரணிதரன் இளம்பெண்ணை தாக்கியுள்ளார். விசாரித்த பட்டாபிராம் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.





















