Storm Water: சென்னை சூளைமேட்டில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆலாகியுள்ளனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீர்:
மழைக்காலம் நெருங்கி வருவதை ஒட்டி சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக தோண்டப்படும் குழிகளால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு ஆளாகி வருவதை பல இடங்களில் காண முடிகிறது. குறிப்பாக இத்தகைய குழிகளால் பிரதான சாலைகளில் பீக் ஹவர்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியால், குடிநீரில் கழிவு நீர் கலந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை தேவைகளுக்கு கூட நீர் இன்றி சிரமம்:
சூளைமேடு பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரியார் பாதையில்,மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது கழிவு நீருக்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அது மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் நீரில் கலந்துள்ளது. இதனால், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் உள்ள குழாய்களை திறந்தாலே துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீர் கலந்த நீர் மட்டுமே குழாயில் வருகிறது. அதனை அடிப்படை தேவைக்கு கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் மக்களின் தினசரி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அச்சம்:
வீடுகளிலேயே துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் துர்நாற்றம் இன்றி கலப்படத்துடன் வந்த நீரை சிலர் எதிர்பாராதவிதமாக பயன்படுத்தி, தொண்டை எரிச்சல், அரிப்பு, வாந்தி உள்ளிட்ட சில பிரச்னைகளையும் எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அஞ்சுகின்றனர். அலெர்ஜி, டையேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மறுபுறம், குடிக்க, குளிக்க, துணிகளை துவைக்க என எந்தவொரு பணியையும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
சாலை முனையில் மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் காரணமாகவே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக ஐயப்பன் நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்தும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தரப்பில், தற்போது வரை எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் விரைந்து இந்த விவகாரத்தில் தீர்வு காண பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.