தற்கொலை..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கார் தெருவைச் சார்ந்த மாரிமுத்து இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா(20) சென்னை பொதேரியில் உள்ள பிரபல கல்லூரியில் , பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து பொத்தேரி வரை தினமும் , தொடர்வண்டி மூலம் பொத்தேரி செல்வது வழக்கம். அந்த வகையில் மாணவி இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக சிங்கபெருமாள்கோவில் இரயில் நிலையத்திற்கு வந்த மாணவி, திடீரென செங்கல்பட்டிலிருந்து - சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார (விரைவு) இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதனை பார்த்த இரயில் பயணிகள் பதறிப்போன நிலையில் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக இரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்காவுடன் சண்டை...
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , மாணவி நேற்று கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு கல்ச்சுரல்ஸ் விழாவில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். மேலும் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது, அக்காவான பவித்ராவின் சேலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிரோஷாவின் அக்கா பவித்ரா ஏன் என்னுடைய சேலையை பயன்படுத்தினாய் என நேற்று நள்ளிரவு சண்டையிட்டதாக கூறப்படுகிறது . இதனால் கவலை அடைந்த மாணவி,
இரவு மற்றும் காலையும் உணவை சாப்பிடாமல் புறக்கணித்துள்ளார்.
ரயில் முன் பாய்ந்த மாணவி
மாணவியின் தந்தை சமாதானம் செய்தும் சமாதானம் அடையாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து காலை தந்தை இருசக்கர வாகனத்தில் மாணவியை ரயில்வே நிலையம் வரை கொண்டு வந்து விட்டுள்ளார். மன உளைச்சல் இருந்த மாணவி விரைவு வண்டி வந்ததை பார்த்தவுடன், பிளாட்பாரம் இருந்து இறங்கி, ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தனது இரு கைகளால் காது முடிகொண்டு படுத்துள்ளார் . இதனால் நிரோஷா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .