Chennai Building Collapse:  கட்டிடம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இளம் பெண் ப்ரியாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பதாக பேட்டி அளித்துள்ளனர். ப்ரியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர். 


ஏற்கனவே கட்டிட இடிப்பு பணியின் போது சுவர் விழுந்து இளம்பெண் பலியானதை அடுத்து பணிகளை நிறுத்த மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 


இடிந்து விழுந்த கட்டிடம்:


சென்னை ஆயிரம்விளக்கு  பகுதியில் உள்ள மசூதி அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த தனியார் கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி  கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கட்டிடத்தின் சுற்றுச்சுவரை  இடித்துக் கொண்டிருந்த போது அந்த சுற்றுச்சுவர்  அமைந்துள்ள பாதை வழியாக வந்த பெண்கள் மீது இடிந்து விழுந்தது. 


கட்டிட சுற்றுச்சுவரின் இடிபாடுகளில் பெண்கள் சிக்கியதைக் கண்ட பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன்,  உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் விபத்து குறித்து தெரிவித்தனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


இளம்பெண் உயிரிழப்பு:


இந்த விபத்தில் தேனியைச் சேர்ந்த பிரியா என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடலில் காயங்கள் ஏற்பட்ட்டு உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு மிகவும்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கட்டிடம் இடிக்கப்பட்டதே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் பிரியா என்றும் அவர் தேனியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. பிரியா தேனியைச் சேர்ந்தவர் ஆவார். பம்மலில் உள்ள தனது சித்தி வீட்டில் இருந்து ஆயிரம்விளக்கில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் பணிக்கு வந்து சென்றுள்ளார்.


பணிகளை நிறுத்த உத்தரவு:


ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர் ஞானசேகர், ஜே.சி.பி. ஓட்டுனர் பாலாஜி மற்றும் மேற்பார்வையாளர் பிரபு ஆகியோரிடம் போலீசார் காலை முதல் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஜே.சி.பி. உரிமையாளர் ஞானசேகர் மற்றும் ஓட்டுனர் பாலாஜி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   


மேலும் இடிபாடுகளின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நில்லையில். தற்போது சென்னை மாநகராட்சி கட்டிட் இடிப்பு பணிகளை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.