மின்சார பேருந்து தொடக்கம்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத , பேருந்துகளின் எரிபொருள் இயக்கச் செலவுகளை குறைக்கும் வண்ணம் சென்னையில் மின்சார பேருந்து சேவையை , முதற் கட்டமாக சென்னை மாநகரில் 207 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் அறிமுகப்படுத்தி பேருந்துகள் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் , நிலையான நகர்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் ( CCP - SUSP ) உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ( AIIB ) பங்களிப்புடன் , சென்னையில் சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் , மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் , 1225 தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக ஐந்து பணிமனைகளில் பேருந்து இயக்கம்
வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகளும் , பெரும்பாக்கம் பணி மனையிலிருந்து 135 பேருந்துகளும் , மத்திய பணிமனையிலுருந்து 145 பேருந்துகளும் , தண்டையார்பேட்டை -1 பணிமனையிலிருந்து 100 பேருந்துகளும் , பூந்தமல்லி பணி மனையிலிருந்து 125 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக ஆறு பணிமனைகளிலிருந்து பேருந்து இயக்கம்
ஆலந்தூரிலிருந்து 80 பேருந்துகள் , மத்திய பணியமனை -2 லிருந்து 80 பேருந்துகள் , பாடிய நல்லூரிலிருந்து 100 பேருந்துகள் , பெரம்பூரிலிருந்து 120 பேருந்துகள் , ஆவடி - லிருந்து 120 பேருந்துகள் , ஐயப்பன் தாங்கலிருந்து 100 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் வியாசர்பாடி பணிமனையில் பணியாளர்களுக்கு ஓய்வறை , பராமரிப்பு கூடம் , அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்டவை 47.50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டதையும் திறந்து வைத்தார்.
எந்தெந்த பணிமனைகளில் Charging Point
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு வியாசர்பாடி, பெரும்பாக்கம் , சென்ட்ரல் , பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் சார்ஜிங் பாயின்ட்கள் அமைத்து மின்சார பேருந்துகள் தொடர்ந்து இயக்கபட உள்ளது.
மின்சார பேருந்தில் உள்ள சிறப்பம்சங்கள்
1. மின்சார பேருந்துகள் பொருத்தமட்டில் 240 கி.வாட் சார்ஜ் செய்தால் 45 நிமிடங்களில் 2 பேருந்துகளுக்கு முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். முழுவதுமாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ வரை பயணம் செய்ய முடியும் வகையில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2. தாழ்த்தள பேருந்துகளில் இருப்பது போல மாற்றுத் திறனாளிகள் ஏறுவதற்கான சாய்தள வசதி உள்ளது.
3. மாற்று திறனாளிகளுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
4. இந்த பேருந்தின் உள்ளே 7 பக்கம் சி.சி.டிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதன் Display ஓட்டுனர் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
5. GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதால் , அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் வசதியும் , இடத்தின் பெயரை பேருந்து உள்ளே பொருத்தப்பட்டுள்ள LED திரையிலும் , ஒலி பெருக்கியில் கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
6. வேக தடைகளுக்கு ஏற்றவாறு பேருந்து உயரத்தை உயர்த்தும் வசதி , சீட் பெல்ட் போடும் வசதி உள்ளது.
7. பயணிகள் தங்கள் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் USB Point - கள் அமைக்கப்பட்டுள்ளது.
8. அவசக்கால பொத்தான்கள் ( Emergency Button ) பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் , ஓட்டுனர் எளிதில் பேருந்துகளை இயக்க பல்வேறு வசதிகள் இந்த மின்சார பேருந்துகளிலும் இடம் பெற்றுள்ளன.