சென்னை விமான நிலையத்தில் 3 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.94.14 லட்சம் மதிப்புள்ள 1.89 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை சென்னை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, தங்கம் கடத்தல் அதிகமாக இருந்து வருவகிறது  


இந்நிலையில்,  துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK 0544 என்ற விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி, சுங்கத் துறையினர் அந்த விமானத்தில் வந்தவர்களிடையே சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு ஆண் பயணி தன்னுடைய ஷீ மற்றும் ஷாக்ஸில் 24 கேரட் தங்க பெஸ்டை மறைத்துவைத்து கடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.66.82 லட்சம் என்றும், தங்கத்தைக் கடத்த முயன்ற நபரையும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த 25 -ஆம் தேதியன்று இதேபோன்று இருவரிடம் சோதனை நடத்தியதில் 27.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


துபாயில் இருந்து வந்த FZ-447 விமானத்தில் இரண்டு ஆண் பயணிகள் 24 கேரட் தங்கத்தை 36 தங்க உருளைகள் லேப்டாப் ஜார்ஜர்களின் ப்ளக் பின்களில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். இதை அவர்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை கண்டறிந்த சுங்கத் துறையினர் அவர்களை கைது செய்தனர்.



நாளுக்கு நாள் புது விதமான நவீன முறையில் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது கவலையை ஏற்படுத்தியது.


கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 94.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


தங்கம் கடத்தல் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டனர். துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிகமாக கடத்தி வரப்படுகிறது. 


பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்தும், தங்க ஸ்பேனர்கள், டூல்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வருவது என நூதன முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்திருக்கின்றன.


அதேபோல், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 10 கோடியே 97 லட்சம் ரூபாய் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவூதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை மட்டும் இன்றி, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் தங்க கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க, தொடர் நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.