ஒவ்வொரு நாளும் காரோ, பைக்கோ எடுத்து வெளியில் செல்லும்போது எந்த விபத்திலும் சிக்கிவிடாமல் பத்திரமாக திரும்ப வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உதிக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். சென்னையில், வேலைக்கு சென்றுவிட்டோ அல்லது வெளியில் சென்றுவிட்டோ வீட்டிற்கு திரும்புவது என்பது குதிரை கொம்பாகவே இருந்து வந்தது. காரணம், நாமே முறையாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து விதிகளின் படி வாகனத்தை ஓட்டி சென்றாலும் எதிரே வருபவர்களோ, அருகே வருபவர்களோ அவ்வாறு நூறு சதவீதம் விதிகளை பின்பற்றுவதில்லை. விளைவு, அவர்கள் செய்யும் தப்பிற்கு சரியாக செல்லும் நாமும் பலி ஆடு ஆகிவிடுகிறோம்.


Zero Accident Day – சென்னை காவல்துறையின் முன்னெடுப்பு


இதனை தடுப்பதற்காக சென்னை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு மேற்கொண்டுள்ள பிரச்சாரம் தான் ”0”. ஆம், ZAD எனும் Zero Accident Day. தொடர்ச்சியாக சென்னை முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு, விதிகளை மீறுவோம் மீது கடுமையான நடவடிக்கையை எந்த சமரசமின்றி சென்னை காவல்துறை எடுத்ததன் விளைவாக கடந்த 20 நாட்களில் 6 நாட்கள் எந்த வித விபத்தும் சென்னையில் ஏற்படவில்லை என்ற ஆச்சரியம் நிகழ்ந்தேறியுள்ளது.


இந்த முன்னெடுப்பிற்காக, சமூக வலைதளத்தில் சிறப்பான மீம் போடுபவர்கள், வீடியோ எடுத்து வெளியிடுபவர்களுக்கு பரிசுகளையும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்தது. அதன மூலம் பலர் லட்சக் கணக்கிலான பரிசுகளை பெற்று வருகின்றனர்.


நேற்று சென்னையில் விபத்தே இல்லை


நேற்றைய நிலவரப்படி சென்னை மாநகரில் ஒரு சிறிய விபத்து கூட ஏற்படவில்லை. அதனால், எவருக்கும் காயமோ உயிரிழப்போ இல்லை. இந்த முன்னெடுப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, சாலையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்பட்டுவிடுமே என்ற அச்ச உணர்வில் இருந்து சென்னை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகின்றனர்.




காதல் சின்னமாக மாறிய சிக்னல்கள்


அதே நேரத்தில் சாலையில் செல்லும்போது சிக்னலில் சிகப்பு நிற விளக்கு எரிந்துவிட்டால், எரிச்சலாகி நிற்போம். ஆனால், இப்போது அந்த சிகப்பு நிற விளக்கே காதலை பிரதிபலைக்கும் இதய வடிவில் வடிவமைக்கப்பட்டு, அதனை பார்க்கும்போது எந்த எரிச்சலும் வராத வகையில் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.






போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகரின் முயற்சி


சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருக்கும் சுதாகர் ஐபிஎஸ் எடுத்த முயற்சியின் காரணமாக இந்த முன்னெடுப்பை ஒட்டுமொத்த சென்னை காவல்துறையும் சிறப்பாக செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் லஞ்சம் வாங்கிய போலீசார் குறித்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆன பிறகு, அனைத்து காவலர்களையும் வாக்கி டாக்கியில் அழைத்து கடுமையாக எச்சரித்தார் சுதாகர். அந்த ஆடியோ அந்த சமயத்தில் ஒட்டுமொத்த சென்னை காவல்துறையினரையே ஆட்டம் காண வைத்தது.


காவல்துறையின் கண்ணியத்தை ஒரு படி மேலே உயர்த்த படும்பாடு பட்டால், இதுபோன்ற செயல்களால் 10 படி கீழே இறக்கிவிடுகின்றீர்கள் என்று சுதாகர் பேசிய ஆதங்க ஆடியோவிற்கு பிறகும் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னரும் சென்னை மாநகர போக்குவரத்து போலிசாரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் சிறப்பாக பணி செய்து வருகின்றனர்.


அதற்கு எடுத்துக்காட்டுதான், சென்னையில் விபத்தே இல்லாத நாளாக ஒவ்வொரு நாளையும் மாற்றிக் காட்டும் முயற்சி.  சென்னை போலீசாருக்கு வாழ்த்துகள்