செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதன். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்து மூலம் சோத்துப்பாக்கத்தில் இருந்து அச்சரப்பாக்கத்திற்கு பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல இன்று நிவேதா பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பொழுது படிக்கட்டில் தொங்கி கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு படிக்கட்டில் தொங்கிச் சென்று கொண்டிருந்த பொழுது, பேருந்தில் இருந்த சில இரும்பு கம்பிகள் மூலம் இடது கையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டில் தொங்கி வந்த மாணவன் நிலை தடுமாறி , கையை விட்டதால் மேல்மருவத்தூர் பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காலை மற்றும் மாலை வேளையில், இந்த வழி தடத்தில் ஒரே ஒரு பேருந்து வருவதாகவும், இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கிருந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாகவும், கூடுதல் பேருந்து இல்லாததற்கே இதற்கு காரணம் எனவும், உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் படியில் இருந்து விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தற்பொழுது அந்த வீடியோ சமூக வளையத்தில் வைரல் ஆகி பரவி வருகிறது.