களத்திற்கு வந்த கோத்ரேஜ்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. சென்னை, செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்..
Godrej Chennai Plant : செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் சிப்காட் பகுதியில் ரூபாய் 515 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

Godrej Consumer Products CHENNAI: செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் சிப்காட் பகுதியில் 515 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னைக்கு நிகரான வளர்ச்சி
சென்னைக்கு நிகரான வளர்ச்சியை நோக்கி சென்னை புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
முதலீட்டாளர்களின் கனவு மாநிலம்
தமிழ்நாடு அரசு சார்பில் முதலீட்டாளர்களின் கனவு மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, ட்ரில்லியன் டாலர் எக்னாமியை அடைய வேண்டும் என்பது லட்சியம் என அரசு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், அதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் புதிய முதலீடுகளை பெறுவதிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம்
தொடர்ந்து புது முதலீட்டாளர்கள் மூலம் புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு, அதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் உருவாக்கித் தரும் பணியை அரசு செய்து வருகிறது. சிப்காட் தொழில் பூங்காவில் தொழில் தொடங்கும் போது, சம்பந்தப்பட்ட சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
பையனூர் சிப்காட் பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் பழையனூர் பகுதியில் சிப்காட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 515 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலை கட்டும் பணி நடைபெற்று வந்தது.
ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
சிப்காட் பூங்காவில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனம் கட்டுமான பணிகள் 100% நிறைவடைந்து உற்பத்தி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலை
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலையில் சோப், வாசனைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன. குறிப்பாக இந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தொழிற்சாலை நிர்வாகம், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக இதில் அதிக அளவு பெண்கள் பணியாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இங்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆலையை திறந்து வைத்த பிறகு, அதன் முதல் உற்பத்தையும் தொடங்கி வைத்தார்.





















