சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது . சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதைதான் காரணமாக உள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரி 


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படும் போது, பல்வேறு குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு என்பது அதிகாரிகளுக்கு சவாலான ஒன்றாக உள்ளது.


செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ?


செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 23.27 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 3.448 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர் வரத்து 355 கன அடியாக உள்ளது. மழை நின்ற பிறகும் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பல்வேறு ஏரிகளில் உபரி நீர் வெளியேறி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோன்று கிருஷ்ணா கால்வாய் வழியாகவும் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏரிக்கு நீர் வருவதை குறைக்க முடியும் எனவும், மழை இல்லை என்றால் ஏரி திறக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தனர்.