சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு சந்த்கபீர் தேசிய விருதை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஆண்டு தோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.
கைத்தறி விருதுகளில் முதன்மையான விருதாக கருதப்படும் 2018ஆம் ஆண்டுக்கான சந்த் கபீர் விருது ஒருவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 பேருக்கும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிய பின்னர் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறியது, நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான சந்த் கபீர் விருது இந்த ஆண்டு காஞ்சிபுரத்துக்கு கிடைத்திருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை காஞ்சிபுரம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி (61) பெறவுள் ளார். இந்த விருதுடன் ஒரு தங்க நாணயம், 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை,பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம், 3 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்கப்படும்.
சிறந்த நெசவாளர் என்ற முறையில் இவ்விருது கிடைத்துள்ளது. மத்திய,மாநில அரசுகளிடமிருந்து ஏற்கனவே விருது பெற்றிருந்தால் மட்டுமே இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியும். இவரை தவிர மேலும் 4 பேர் தரமான கோர்வை ரக பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக சிறந்த நெசவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெறுகிறார்கள். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த காமாட்சி, ஹரி, தர்மலிங்க நகரைச் சேர்ந்த சரளா-கணபதி தம்பதி, சிறந்த பட்டுப்புடவையை வடிவமைத்தமைக்காக இவ்விருது இரு தம்பதியர்களுக்கும் இணைத்து தனித்தனியாக வழங்கப்படவுள்ளது. அதே போல காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த ருக்மணி கண்ணியவேல் (49) காஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ள தெருவைச் சேர்ந்த ஏ.ஹரி (54) உட்பட இவர்கள் 4 பேரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருதுடன் 4 பேருக்கும் தலா 1.50 லட்சம், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை 1, ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், நெசவாளர் பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம் ஆகியனவும் வழங்கப்படும். தமிழகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே சிறந்த சிறந்த நெசவாளர்களுக்கான 5 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கப்படுவது தாமதமாகி இருந்தது. இவ்விருதுகள் புது தில்லியில் விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட இருப்பதாகவும் ஆர்.சசிகலா தெரிவித்தார்.