நடைமேடையில் சுற்றி கொண்டிருந்த 3 வயது குழந்தை ;
தாம்பரம் சான்டோரியம் ரயில் நிலையத்தில் , 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று நடைமேடை அருகே தனியாக அழுதபடி சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த பரங்கிமலை ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டனர். ரயில் நிலையத்தில் வந்திருந்த பயணியரிடம் குழந்தை குறித்து கேட்ட போது , குழந்தை குறித்து எவருக்கும் தெரியவில்லை.
கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயில்
ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து ஒருவர் குழந்தையை இறக்கி விடுவது பதிவாகி இருந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் ஒப்படைப்பு
சானடோரியம் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன் , ரயில் பெட்டியில் இருந்த நபர் குழந்தையை நடைமேடையில் இறக்கி விட்டு செல்லும் காட்சி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை யாரேனும் கடத்தி வந்து இறக்கி விட்டுச் சென்றனரா அல்லது பெற்றோரே விட்டு சென்றனரா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மருத்துவர் தற்கொலை
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர் ஜோதீஸ்வரி ( வயது 30 ) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மீனம்பாக்கத்தில் உள்ள CGH மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
திருமணம் முடிந்து 3 மாதங்கள்
இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதீஸ்வரன் ( வயது 34 ) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் யுதீஸ்வரன் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து தம்பதி இருவரும் மூன்று மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட மனைவியை பிரிந்த யுதீஸ்வரன் சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும் அவ்வப்போது மனைவியை பார்க்க சென்னை வந்து சென்றதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் , பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் 12 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் சகோதரி முத்துலட்சுமி வீட்டிற்கு ஜோதீஸ்வரி சென்றுள்ளார்.
லிப்டில் கீழே செல்லவில்லை
சகோதரி வீட்டில் இருந்து மாலையில் கோடம்பாக்கத்திற்கு புறப்பட்டுள்ளார். குடியிருப்பு லிப் - டிற்குள் சென்ற ஜோதீஸ்வரி கீழே செல்லாமல் மேலே சென்றுள்ளார். மொட்டை மாடியில் செருப்பு கைப்பையை கழற்றி வைத்து விட்டு கீழே குதித்து உள்ளார். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி , பீர்க்கண்காரணை போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.