விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 9 -ஆம் தேதி பட்டியலினத்தவர் தங்களது பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் சித்திரை  திருவிழா போலீஸ் அனுமதியுடன் எளிய முறையில் கொண்டாடினர். மூன்று நாட்கள் கழித்து தங்கள் கோவில் திருவிழா ஒட்டிய கலைநிகழ்ச்சி கொண்டாட்டத்துக்கு, போலீஸிடம் எந்த அனுமதியும் பெறாமல் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கி கருவிகளை பயன்படுத்தி விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர் .



கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நேரத்தில், பட்டியல் இனத்தவர்களின் இந்த கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தால் நோய் பரவல் மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக , அவர்களின் இந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அனுமதி இன்றி நடை பெற்ற கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை நிறுத்தியதோடு இல்லாமல் அவர்கள் பயன்படுத்திய , மைக்செட், ஸ்பீக்கர்களை கைப்பற்றி சென்றனர் .


மே 14-ஆம் தேதி இது தொடர்பாக அந்த கிராமத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிற சாதியை சேர்ந்தவர்கள், பஞ்சாயத்தை கூட்டி . தங்களை மீறி கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததால், பட்டியிலின நாட்டாமைக்காரர்களான சந்தானம் 65, திருமால் 68  மற்றும் ஆறுமுகம் 60 ஆகிய மூவரையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி , இரு பிரிவினரிடையே  சாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் விழுப்புரம் எஸ் பி மற்றும் கலெக்டர் ஒட்டனந்தல்  கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் .



மேலும் இருபிறவினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூன்று பட்டியலினத்தவர் கொடுத்த புகாரின் பேரில் , எதிர் தரப்பினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளதால் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட இழப்பீடு நிதியாக வழங்கப்பட்டது .



விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக இன்று ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி , சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட சந்தானம் , திருமால் மற்றும் ஆறுமுகத்திற்கு தலா 25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார் .