" பர்தா அணிந்து வாடிக்கையாளர் போல வந்த பெண் "

சென்னை வியாசர்பாடி 14-வது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்த அன்குஷ், தனது வீட்டின் கீழ்தளத்தில் கடந்த 14 ஆண்டுகளாக மதன் ஜீவல்லரி என்ற நகைக் கடையை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக பர்தா அணிந்து அடிக்கடி கடைக்கு வந்த பெண் , சிறிய அளவில் நகைகள் வாங்கிய படியே ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

கடையில் கணக்கெடுப்பின் போது 50 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் மாயமானது தெரிய வந்ததால் , சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.  விசாரணையில், கார் மூலம் வந்து சென்ற அந்த பெண் மீஞ்சூரைச் சேர்ந்த ரிஹானா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

20 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

ரிஹானாவின் வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமார் 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரிஹானா மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதும், பல கடைகளை நோட்டமிட்டு இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரிஹானாவிடம், மீதமுள்ள நகைகள் குறித்து எம்.கே.பி. நகர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி , ரிஹானாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது - 24.2 கிலோ குட்கா பாக்கெட் பறிமுதல்

சென்னை டி.பி.சத்திரம் 18 - வது தெருவில் அரசால் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுகிறது என காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்த போது , அங்கு சந்தேகத்திற்கிடமாக ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் , குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

நபரை விசாரணைக்காக டி.பி.சத்திரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து , அயனாவரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹான்ஸ், விமல், கூலிப், வி-1 உட்பட சுமார் 24.2 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 180 மி.லி. அளவு கொண்ட 26 மதுபாட்டில்கள் மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பார்த்திபன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார்.