சென்னையைப் போல் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 2022- 2023ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவுத் திட்டத்தின்போது நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் 18.03.2022 அன்று இன்ன பிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது:
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள்
நடத்தப்படும். புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பொது நூலக இயக்குநர் தனது கடிதங்களில் கீழ்க்காணும் விவரங்களை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்தும் பொருட்டு, மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து (வகை A, B & C) அதில் A வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.17.5 லட்சமும் B வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.14 லட்சமும் C வகை மாவட்டங்களுக்கு மானியமாகத் தலா ரூ.12 லட்சமும் மொத்தம் ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகள் பின்வருமாறு:-
பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சார்ந்த பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து மாநிலம் முழுவதும் புத்தகக் காட்சி நடத்துவதற்கான கால அட்டவணை தயார் செய்தல்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரோடு இணைந்து புத்தகக்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல்.
மாநில அளவில் புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.
நிதி மற்றும் செலவினங்களை ஒருங்கிணைத்து கண்காணித்தல்.
புத்தகக் காட்சி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தல்.
மேலும், மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவின் உறுப்பினர் செயலரை மாவட்ட ஆட்சித் தலைவர் நியமித்துக் கொள்வார் என்றும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பதிப்பகம் சார்ந்த பிரதிநிதிகள், நூலகர்கள், நூலக வாசகர் வட்டம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகள் பின்வருமாறு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு மாவட்டத்தின் மையப்பகுதியில் போதுமான இடவசதியுள்ள காலியான மைதானத்தை தேர்வு செய்தல்,
மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து மாவட்டங்களில் புத்தகக் காட்சியினை நடத்துதல்.
புத்தகக் காட்சி நடத்துவதற்கு மாநில ஒருங்கிணைப்புக் குழு அளிக்கும் கால அட்டவணையிணை, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து உள்ளூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புத்தகக் காட்சி நடத்த வேண்டிய நாட்களை தேர்வு செய்தல்.
புத்தகக் காட்சி நடைபெறும் வளாகத்தில், பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் வடிவமைத்தல்.
புத்தகக் காட்சி நடைபெறும் அரங்கங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, இப்புத்தகக் காட்சியினை உள்ளரங்குகளில் நடத்துதல்.
புத்தகக் காட்சி நடத்துவதற்கான பணிகளை வரிசைப்படுத்தி அவற்றிற்கான உட்குழுக்களை அமைத்து, அதன் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணித்தல்.
புத்தகக் காட்சி மற்றும் அதனைச் சார்ந்து நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், மற்றும் பிற இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் நிகழ்ச்சி நிரலினைத் தயார் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல்.
புத்தகக் காட்சி நடத்துவதற்கான நிதி ஆதாரங்களை அரசு மானியம், கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் நிதி, விளம்பரதாரர் மூலம் பெறப்படும் நிதி ஆகியவை மூலம் நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ளுதல்.
புத்தகக் காட்சிக்காக பயன்படுத்த இயலும் அரசின் பிற துறை நிதியினையும் கண்டறிந்து பயன்படுத்துதல்.
நிதி மேலாண்மைக்கான குழு அமைத்து தனியாக வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் சிக்கனமாகவும், சிறப்பாகவும் நிதியினை கையாளுதல்.
வரவு செலவு கணக்குகளை நிர்வகித்தல்.
பொது மக்கள் மற்றும் மாணவர்களிடம் புத்தகக் காட்சி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல். மேலும், மாணவர்கள் புத்தகக் காட்சியில், புத்தகம் வாங்க பணம் சேமிக்கும் திட்டத்தினை ஊக்குவித்தல்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்