தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-11-2024) மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை மின்சார ரயில் - Chennai Electric Trains
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என பலருக்கும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வெளியே சென்று வருவதற்கும் இந்த மின்சார ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
ரத்து செய்யப்படுவது வழக்கம் - Train Cancel
பொதுவாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதேபோன்று ஒவ்வொரு முறையும் ரயில்கள் ரத்தாகும்போது பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைவது தொடர்கதை ஆகி உள்ளது. சமீபத்தில் எழும்பூர் மற்றும் பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அந்த வகையில் மீண்டும் பராமரிப்பு பணிக்காக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "பயணிகளின் பாதுகாப்பு கருதியும் ரயில்களின் பாதுகாப்பான இயக்கங்களுக்காகவும் பராமரிப்பு பணிகள் மற்றும் சிக்னல் சரி பார்க்க பணிகளுக்காக சென்னை எழும்பூர் விழுப்புரம் பகுதியில் தாம்பரம் யார்டில் நாளை நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக அரைமணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் காலை 6.15 மணி முதல் மாலை 4.10 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.