Credit Card பணத்தை செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கம் , டென்சன் ஆன வாடிக்கையாளர்
கிரிடிட் கார்டு பணத்தை செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கம். டென்சன் ஆகி வங்கி அதிகாரியை தாக்கிய வாடிக்கையாளரை போலீசார் கைது செய்தனர்.

Credit Card பணத்தை செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கம் , டென்சன் ஆகி வங்கி அதிகாரியை தாக்கிய வாடிக்கையாளர்
சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் மண்டல தலைவராக பணியாற்றி வருபவர் ஆனந்த் ( வயது 50 ) சில மாதங்களுக்கு முன் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் அபிஷேக் ( வயது 32 ) என்பவர் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
அதற்கு உங்களது வங்கி கணக்கு உள்ள கிளையில் சென்று கேட்குமாறு கூறி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மதியம் கணக்கு வங்கிக்கு வந்து , விபரங்களை கேட்டு தொந்தரவு செய்ததுடன் , ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த ஆயிரம் விளக்கு போலீசார் , தாக்குதலில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அபிஷேக்கை கைது செய்தனர். அபிஷேக் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை பணத்தை முறையாக செலுத்தாததால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டு அடிக்கடி வங்கிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது
சென்னை அய்யப்பன்தாங்கல் மவுன்ட் பூந்தமல்லி டிரங்க் சாலையைச் சேர்ந்தவர் பரிமளா நாயகி ( வயது 59 ) இவர் கடந்த 2021ம் ஆண்டு மே 17 - ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் பள்ளிக்கரணை எல்.ஐ.சி., நகர் 5 வது பிரதான சாலையில் 6,400 சதுர அடி காலி மனை உள்ளது. அவற்றை விற்பனை செய்ய இருந்த நிலையில், அதில் 3,200 சதுரடி இடத்தை 2019 - ம் ஆண்டு சிலர் அபகரித்ததுடன் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுசிங் பைனான்சில் அடமானம் வைத்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் , சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ மொபைல்ஸ் பைனான்ஸ் தொழில் செய்யும் ரமேஷ் , தனியார் நிறுவன ஊழியர் பிரேம்குமார் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் குஷால் சந்தி ஆகிய மூவரையும் , 2021 - ம் ஆண்டு கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சுமதி ( வயது 49 ) என்பவர் ஐந்து ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் , சிட்லப்பாக்கத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணம் தயாரித்து 2 கோடி ரூபாய் நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 55 ) இவர் ஆகஸ்ட் மாதம் சென்னை - மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் மடிப்பாக்கத்தில் 4,715 சதுரடியில் - 2 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு காலி மனை உள்ளது. அவற்றை சிலர் போலி ஆவணம் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலி ஆவண புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கே.கே.நகரைச் - சேர்ந்த ராகேஷ் , மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கூட்டாளிகளான வெங்கடேசன் பாலசுந்தர ஆறுமுகம் , சாலமன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து புகார் தாரரின் தாய் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அதே போல போலி ஆவணம் தயார் செய்து , பிரியா என்பவர் மட்டுமே வாரிசு என போலி சான்று பெற்றுள்ளனர். இதையடுத்து , நிலத்தை கீழ்கட்டளையைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவரிடம் 1.55 கோடி பெற்றுக் கொண்டு கிரையம் செய்து கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.
அக்டோபர் 2 - ம் தேதி மோசடியில் ஈடுபட்ட பிரியா , பாலசுந்தர ஆறுமுகம், சாலமன் ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான கே.கே. நகரைச் சேர்ந்த ராகேஷ் , மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், ஆகியோரை கைது செய்தனர்.





















