சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய போக்குவரத்தாக சென்னை மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது. அதேபோன்று பறக்கும் ரயிலும் சென்னையில் பிரதான போக்குவரத்து சேவையாக உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை, அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
நான்காவது பாதை
தொடர்ந்து மக்கள் ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்தி வருவதால், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்கள் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை நான்காவது பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதனை அடுத்து இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 274 கோடி மதிப்பீட்டில் நான்காவது பாதை அமைக்கும் பணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
இந்தப் பணிகள் துவங்கியதால் சென்னை கடற்கரையிலிருந்து - சிந்தாதிரிப்பேட்டை வரை செல்லக்கூடிய ரயில்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இதேபோன்று அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்து மேம்பாலம் வழியாக இயக்கப்பட்ட நேரடி ரயில் சேவைகளும், வேளச்சேரி ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பணிகள் விரைந்து முடிந்து ரயில்கள் மீண்டும் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்ட காலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் நான்காவது பாதை அமைக்கும் 14 மாதங்கள் கழித்து முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சென்னை கடற்கரையிலிருந்து, வேளச்சேரிக்கு மேம்பால ரயில் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது. மீண்டும் மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வரவேற்பு அளித்தனர். தற்போது ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
ALSO READ | Kanguva Review in Tamil: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
விரைவில் சேவை
அதேபோன்று ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்து மேம்பாலம் வழியாக வேளச்சேரி வரை இயக்கப்பட்ட ரயில்கள் அப்போது சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்பட்ட ரயில்கள் தற்போது வரை சென்னை கடற்கரை வரைக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வாறு இயக்கப்பட்டு வருவதால், இந்த ரயில் சேவைகளையும் வேளச்சேரி வரை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பயணிகள் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் வேளச்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படிப்படியாக இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.