ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த பயணி தவறவிட்ட 50,000 ரூபாய் பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் அவர்களின் ஆட்டோ மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் பெருமாள் கோவிலுக்கு சென்று இறங்கிவிட்டு ஆட்டோவை வழி அனுப்பிவிட்டார்.
50,000 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்தார்
பிறகு ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் வழக்கம்போல் மதிய உணவிற்கு செவிலிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்து உள்ளார். அந்த சமயம் ஆட்டோவில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்து உள்ளார். பையில் என்ன இருக்கும் என்று பார்க்கும்போது ஆட்டோவில் வந்த பயணியின் புகைப்படம் , ஏடிஎம் கார்டு , பஸ் பர்மிட் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50,000 உள்ளதை கண்டு வியந்துள்ளார். பிறகு பையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து இவர் நம் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயணி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் நேரடியாக யாத்திரி நிவாஸ் இடத்திற்கு சென்று தன் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயனியை தேடி கண்டுபிடித்து அவர் தவறவிட்ட பை , ஏடிஎம் கார்டு , பாஸ் பர்மிட் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50,000 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்தார்.
கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி
இதை பார்த்த ராஜஸ்தான் பயணி தான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துவிட்டது என்று பெரும் மகிழ்ச்சியோடு ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி அவரை பாராட்டினார். ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக உரியவரிடமே சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் நெகிழ்ச்சியான செயலை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.