சென்னையில் ஆட்டோ சவாரி வந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்

Continues below advertisement

ஒடிஷாவைச் சேர்ந்தவர் அசித் நாயக் ( வயது 33 ) இவர் வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடன் பணிபுரியும் 22 வயது ஒடிஷாவைச் சேர்ந்த இளம்பெண்ணும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்ல ஆட்டோவில் ஒன்றாக ஏறினர். மாதவரம் சின்ன ரவுண்டானா வி.எஸ்.மணி நகர் அருகே ஆட்டோ சென்ற போது ஆட்டோவை ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், கத்தியை காட்டி மிரட்டி வடமாநில பெண்ணிடம் அத்து மீறியுள்ளார்.

பயந்து போன இருவரும் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அசித் நாயக்கை மிரட்டி அவர் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க நகையை பறித்து, அங்கிருந்து மாயமானார். இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், ஆட்டோ ஓட்டுநரை ரெட்டேரி அருகே மடக்கி பிடித்தனர். விசாரணையில் மாதவரம் சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 'பல்லு' பிரசாந்த் ( வயது 24 ) என்பதும், இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

ஆன்லைன் ஆப் மூலம் அறிமுகமாகி , கல்லூரி மாணவியிடம் ஆபாச புகைப்படங்களை காட்டி , மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது 

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், தனியார் கல்லுாரியில் படிக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன், 'மோஜ்' செயலி மூலம், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிபின்ராஜ் ( வயது 25 ) என்பவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ச்சியாக இருவரும், வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். அப்போது, அந்தரங்கமாக பேசிய புகைப்படங்களை காட்டி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சென்ட்ரலில் உள்ள லாட்ஜுக்கு அப்பெண்ணை வரவழைத்து, லிபின்ராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் புகைப்படங்களை காட்டி மிரட்டி, மீண்டும் லாட்ஜிக்கு அழைத்த போது, அப்பெண் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த லிபின்ராஜ், பெண்ணின் தாய்க்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாய், இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த தனிப்படை உதவி ஆய்வாளர் சிவா தலைமையிலான போலீசார், கன்னியாகுமரி சென்று, லிபின்ராஜை கைது செய்தனர். லிபின் ராஜ் மீது, பாலியல் வன்கொடுமை, குற்றவியல் நம்பிக்கை மோசடி, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

போலி பத்திரம் செய்து மோசடி - இரு பெண்கள் கைது

யானைகவுனி ஆதியப்பா நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் ( வயது 55 ) இவரது தந்தை பாலசுப்ரமணியனுக்கு திருவள்ளூர் மாவட்டம், வீச்சூர் கிராமம் லட்சுமி நகரில், 2,400 சதுரடி இடம் உள்ளது. கடந்த 2022 - ம் ஆண்டு உடல்நல குறைவால் பாலசுப்ரமணியன் இறந்து விட சங்கரன் அந்த இடத்தை விற்பனை செய்ய முடிவெடுத்து வில்லங்க சான்று போட்டு பார்த்துள்ளார்.

அப்போது இறந்த பாலசுப்ரமணியனின் பெயரில் போலி பத்திரம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து, சுடர்விழி ( வயது 41 ) என்பவர் அந்த இடத்தை அபகரித்தது தெரிந்தது. இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் சங்கரன் புகார் அளித்தார். அதன்படி நிலப் பிரச்னை பிரிவு போலீசார், வழக்கு பதிந்து, போலி பத்திரங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுடர்விழி ( வயது 41 ) மற்றும் விஜயலட்சுமி, ( வயது 48 ) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.