மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில்  வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வில்லாக்களுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

 

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு  ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு,  விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.




மற்றொரு வழக்கு




 

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்   கை ரேகை பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும்  காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

 

குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டம், 2022ம் ஆண்டும் ஏப்ரல் 18ம் தேதி   அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது.

 

இந்த சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அதில், மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில்  எந்த சட்டமும் இயற்ற முடியாது எனவும், அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை என்றும், இதுசம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது என்றும் இயற்கை நீதிக்கு முரணானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, ஆறு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.