செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. தன்னை அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த, 2014ல், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி, தனது கணவர் மற்றும், 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, அவரது காதலனான அரசு என்பவருடன் ஈரோட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
அன்னபூரணி அரசு அம்மன்
இந்நிலையில், அரசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அன்னபூரணி தனது காதலனான, அரசு உருவ சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்பு 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்து, தன்னை கடவுள் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், இவை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார்.
ஆன்மீக சொற்பொழிவு
இந்நிலையில், ஆன்மீக பூமியான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போட்டார். அப்போது அங்கு வந்த சில பெண் பக்தர்கள் அவருக்கு கற்பூர தீபம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும், சில ஆண்கள், பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினர். அப்போது தெரிவித்த அவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. அதற்காக என்னிடம் உள்ள பணத்திற்கு இங்குதான் இடம் வாங்க முடிந்தது. இங்கு ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக பணியை தொடர உள்ளேன். நான் அருள்வாக்கு சொல்வதில்லை, ஆன்மீகத்தைத்தான் சொல்லிகொடுத்து வருகிறேன். எனது இரண்டாவது கணவர் அரசு சிலை இங்கு ஆசிரமத்தில்தான் உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே இல்லாமல் ஆன்மீகம் இல்லை. என்னை அழிக்க யாராலும் முடியாது என்றும் கூறியுள்ளார்.
பாத பூஜை
இந்நிலையில் தான் சாமியார் இல்லை கடவுள் என்று அவருக்கு தானே கோவிலை கட்ட முடிவு செய்து கோவில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி கோவிலையும் கட்டி முடித்துள்ளார். கோவில் என்றாலே கோவிலுக்குள் கடவுளின் திருவுரு சிலை இருக்கும். ஆனால் அன்னபூரணி அரசு அம்மா கட்டிய கோவிலில் தன்னுடைய உருவத்தை சிலையாக செய்து அங்கு கடவுள் சிலை போன்று அமைத்துள்ளார். மேலும் கோவிலின் கும்பாபிஷேகத்தின் போது அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் அவதரித்த அன்னபூரணி அம்மா அரசுவிற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாத பூஜை செய்து காலினை தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். அப்போதும் அசராமல் நின்ற, அன்னபூரணியிடம் பலர் ஆசிபெற்றனர்
அடுத்த திருமணம்
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தினமும் உபதேசங்களை வழங்கி வருகிறார் . அதேபோன்று சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தனது பக்தர்களுக்கு அருள் ஆசி கூறி வருகிறார். தொடர்ந்து சாமியாக வலம் வரும் அன்னபூரணி அரசு அம்மா , அடுத்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அன்னபூரணி அரசு அம்மா சமூக வலைதளத்தில் செய்துள்ள பதிவில், அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால், என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும் என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும்,நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்ஸ என தெரிவித்துள்ளார். திருமணம் இன்று நடைபெற உள்ளது என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கீழ்பெண்ணாத்தூர் ஆசிரமத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.