அக்டோபர் 6 ம் தேதி காய்கறி திருவிழா


ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 


இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பங்கேற்று பேசினார்.


காய்கறிகள் , அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும்


ஈஷா மண் காப்போம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.  அந்த வகையில் நஞ்சில்லா காய்கறிகளை விவசாயிகள் உற்பத்தி செய்யவது குறித்தும், சந்தையில் நல்ல விலை கிடைக்காத சூழல், பூச்சித் தொல்லைகள் என விவசாயிகள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 


மேலும் இயற்கை விவசாயத்தில் நல்ல வருவாய் ஈட்டுவது எப்படி என்கிற தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்தில்  மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா' நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயியான திரு. தக்காளி ராமன் "விதை முதல் விற்பனை வரை தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் பேசவுள்ளார். அத்தோடு காய்கறிகளை வைத்தே அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்பதை வலியுறுத்தி 12 வகையான காய்கறிகள் பற்றியும், அதை கொண்டு செய்யப்படும் காய்கறி வைத்தியம் குறித்தும் பேச உள்ளார் 'காய்கறி வைத்தியர்' திரு. அருண் பிரகாஷ். 


மேலும் உணவு காடு பயிற்சியாளர் விதைத்தீவு பிரியா, முன்னோடி விவசாயிகளான பொள்ளாச்சி திரு. மாரிமுத்து, கோவை திரு. விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-IIHR) முதன்மை விஞ்ஞானிகளான திரு. Dr. செந்தில்குமார், திரு. Dr.வி.சங்கர் ஆகியோர் பங்கேற்று மண் மற்றும் பயிர் வளம் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேச உள்ளனர். 


இது தவிர்த்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான தீர்வுகள், கீரை சாகுபடி, வருவாயை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். 


பாரம்பரிய விதைகள் கண்காட்சி


இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக இதில் இயற்கை சந்தை, விதை திருவிழா மற்றும் இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை நடைபெற உள்ளது. 'விதை திருவிழா நடைபெறுகிறது.  மேலும் இதில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநில விதை பாதுகாவலர்கள் அரிய வகை விதைகளை உற்பத்தி செய்து அதை பரவலாக்கம் செய்யும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களை கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கொண்டு வருகின்றனர். 


மேலும் இயற்கை விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள், 50 வகையான மூலிகை செடிகள், 250 வகையான  ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் காய்கறியில் ஐஸ்கிரீம் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறவுள்ளன. 


நஞ்சில்லா இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.