Admk 2026: அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முக்கிய கட்சிகள் தேர்தல் பணி மேற்கொள்ள தொடங்கியுள்ளன. கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகள், கட்சி கட்டமைப்பை பலப்படுத்துதல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.


தோல்வியில் அதிமுக


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதான கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சி, முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், தலைமையில் ஏற்பட்ட குழப்பம், என பல பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும், அதிமுக கவுரவமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.


கூட்டணியை வலியுறுத்திய நிர்வாகிகள்


ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்திருந்தது. இந்த தோல்வியிலிருந்து அதிமுக மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தோல்விக்கு முக்கிய காரணம் கூட்டணி அமைக்காதது தான் என, நிர்வாகிகள் வெளிப்படையாக பேச தொடங்கினர். 


2021 தேர்தலில் கூட்டணியில் பாமக மற்றும் பாஜக இருந்ததால், அவர்களின் வாக்கு வங்கி உதவி செய்ததாக அதிமுகவினர் வெளிப்படையாக பேச தொடங்கினர். இந்த தகவல் தலைமை வரை சென்று சேர்ந்துள்ளது. அதேபோன்று திமுக கடந்த ஆட்சியில் செய்ததைப் போல், நாமும் போராட்டம் செய்ய வேண்டும் என தலைமைக்கும் பல்வேறு நிர்வாகிகள் யோசனைகளை வாரி வழங்கியுள்ளனர். மக்களின் கவனத்தைப் பெற அதிமுகவும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 


தலைமை பார்த்துக் கொள்ளும் 


வருகின்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிடம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும் என பலமுறை சமாதானம் செய்தும், தொடர்ந்து நிர்வாகிகள் இதையே வலியுறுத்தி வந்துள்ளனர்.


இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, முதலில் மாவட்டத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? உங்களுடைய பர்பாமன்ஸ் என்ன? லோக்கல் பிரச்சனையில் கவனம் செலுத்தினீர்களா ?. கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்து கொள்ளும் அதுவும் தேர்தல் நேரத்தில் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.


போட்டுக் கொண்டு கட்சி பணி..


இப்போது கூட்டணிக்குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். முதலில் உள்ளூரில் இருக்கும் பிரச்சனையை சென்று கவனியுங்கள். ஒவ்வொருவரும் மாவட்டத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளில் மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுங்கள். கிளை அளவில் தொடங்கி மாவட்ட அளவில், இந்த பணி நடைபெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட அளவில் நடைபெறும் போராட்டங்களை, உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தப்பட்டுள்ளது. 


இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிமுகவினர் கள பணியில் இறங்கி உள்ளனர். தலைமை அனைத்தையும் கண்காணிக்கிறது என தெரிந்ததிலிருந்து, நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு, கட்சி பணியை செய்ய தொடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது அதிமுகவினர் உள்ளூர் பிரச்சனைகளை மையப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.