மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பேச மறுத்த நடிகை சுஹாசினி
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் ரோட்டரி ராஜன் ஐ பேங்க் சார்பில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ரோட்டரி ராஜன் ஐ பேங்க் சார்பில் பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் கண் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நடிகை சுஹாசினி மணிரத்னம் கண் தானம் செய்தற்கான கையொப்பம் இட்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது ,
அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் எனவும் தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கண் தானம் செய்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் இன்று பொது வெளியில் கையொப்பமிட்டு கண் தானம் செய்தது மிகுந்த ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
நான் தற்பொழுதே ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்து வருகிறேன். தலசீமியா நோயாளிகளுக்காக குறிப்பாக குழந்தைகளுக்காக ரத்தம் தானம் கொடுக்க முதல் ஆளாக நான் நிற்பேன். மறைந்ததற்கு பிறகு எல்லா உறுப்புகளையும் தானமாக கொடுக்கலாம் குறிப்பா கண் தானம் செய்ய வேண்டும். மனமுகந்து கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும் ஹேமா கமிட்டி குறித்தான அறிக்கை தொடர்பான கேள்விக்கு பேச மறுத்து நடிகை சுஹாசினி மணிரத்னம் பின் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.