சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park )


சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, மிக முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தனி இடம் உண்டு. இந்த பூங்காவில் புலி, சிங்கம், யானை, கரடி, வெள்ளைப்புலி, பாம்பு வகைகளில் ராஜநாகம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள். பறவை வகைகளில் மயில், கிளி, பஞ்சவர்ண கிளி, உள்ளிட்ட பறவை வகைகளும், இதுபோக பிற விலங்கு வகைகளில் மான், நீர்யானை, நீர்நாய், பல்வேறு வகையான குரங்குகள் மனித குரங்குகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி சேர்ந்த பொதுமக்களை தவிர தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருடந்தோறும் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவை தரம் உயர்த்த தமிழக அரசு மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் ( vandalur zoo animal adoption )


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் இது உள்ளது. பூங்காவின் செலவினங்களை குறைப்பதற்காக, விலங்குகளை பராமரிப்பதற்காக விலங்குகளை தடுப்பதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் ( actor sivakarthikeyan  )


இந்தநிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்தார். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்து குறிப்பில் கூறுகையில், ''நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு பூங்கா நிர்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்பட்டது. மேலும், இது ஷேரு சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது .


விலங்குகளை தத்து எடுப்பது எப்படி ( how to adopt animal in Vandalur zoo )


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. பார்வையாளாராக வந்து விலங்குகளை, பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80G-க்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப்பார்ப்பது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா நிர்வாகத்திற்கும் மற்றும் இங்குள்ள விலங்குகளின் நல்வாழ்விற்கும் விலங்குகளை தத்தெடுப்பதின் மூலம் இத்திட்டத்தின் வழியாக ஆதரவு தருகிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தின் மூலமாக தனிநபரான நீங்கள் விலங்குகளின் பாதுகாவலராக ஆகிறீர்கள், தத்தெடுப்பு ஆதரவு என்பது பூங்காவிலுள்ள வனவிலங்குகளின் உயர்நிலை பாதுகாப்பாகும். விலங்குகளை தத்தெடுப்பதின் மூலமாக தனிமனிதற்கு விலங்குகளின் பாதுகாப்பின் பங்களிப்பு அவசியத்தை பற்றி உங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தெரியவரும். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.