போதைப் பொருட்கள் கடத்தல்

Continues below advertisement

சென்னை திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதைப் பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த 19ம் தேதி திருமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாடி பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன் (வயது 26) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 4 போதை ஸ்டாம்ப்கள், பைக், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தியானேஸ்வரனை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், தேனாம்பேட்டையை சேர்ந்த பட்டதாரி சர்புதீன் (வயது 44), வளசரவாக்கத்தை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சரத் (வயது 30), சட்டக் கல்லூரியில் படித்து வரும் முகப்பேர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 27) ஆகியோரை கைது செய்தனர்.

Continues below advertisement

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து உயர் ரக போதைப் பொருட்களை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சர்புதீனின் சொகுசு கார் மற்றும் ரூ.27.5 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி கஞ்சா கைப்பற்றப்பட்டது. சர்புதீன் கடந்த 4 வருடத்ததிற்கு முன் நடிகர் சிம்புவிடம் மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

அதிமுகவில் தேர்தல் வியூகங்கள் வகுப்பாளர்

தற்போது , இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பனியில் ஊழியராக வேலை செய்து வந்ததும் இவரது காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.27.5 லட்சம் தனியார் கம்பெனியின் உரிமையாளர் ஹரிஷ் கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் கம்பெனி உரிமையாளர் ஹரிஷ் மற்றும் இவரது நண்பர் சாய் ஆகியோரை விசாரணைக்காக திருமங்கலம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

இதில் ஹரிஷ் என்பவர் அதிமுகவில் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பவராக உள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்டதும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறப்பினர் தி.நகர் சத்யா தலைமையில் சுமார் 100 - க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அண்ணாநகர் துணை ஆணையர் மற்றும் திருமங்கலம் உதவி ஆணையர் ஆகியோர், 14 மணி நேரம் தொடர் விசாரணைக்கு பிறகு ஹரிஷ் மற்றும் சாய் ஆகியோரை விடுவித்தனர். மேலும் எப்போது அழைத்தாலும் காவல் நிலையம் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

கைதான சர்புதீன் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது ; 

நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவிடம் மேனேஜராக பணியாற்றினேன். சினிமாவில் சாதிக்க நினைத்து சொந்த பணத்தை முதலீடு செய்து திரைப்படம் தயாரித்தேன். இதில், பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கடனை சமாளிக்க வழி தெரியாததால், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சர்புதீனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத ரூ.27.5 லட்சத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

சர்புதீன் இணை தயாரிப்பாளராக இருந்ததால், சினிமா பிரபலங்களுக்கு அவ்வப்போது தனது வீட்டில் போதைப் பொருள் விருந்து நடத்தி உள்ளார். இவரது செல்போன் தொடர்புகள் மற்றும் இணையதள முகவரியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மேலும் பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் சர்புதின் உள்ளிட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருமங்கலம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.