விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டும் கல்வி ஆண்டு பாதிக்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி நடைபெற்றன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
மே கடைசி வரை பொதுத்தேர்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. ஜூன் 17ஆம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 12ஆம் வகுப்புக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும் அரசுப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில், பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.
இதில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும் பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்