200 கிலோ குட்கா கடத்திய நபர் கைது
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 181 வது தெருவில் கொடுங்கையூர் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் நின்றிருந்த மஹிந்திரா லோடு வேனை, மடக்கி சோதனை மேற்கொண்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சல்மான் ஷெரிப் ( வயது 36 ) கடந்த 7 - ம் தேதி, பெங்களூரில் இருந்து 350 கிலோ குட்கா பொருட்களை வாங்கி வந்து, அதில் 150 கிலோ குட்கா பொருட்களை ஊத்துக்கோட்டையில் கைமாற்றிய நிலையில், மீதமுள்ள 200 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைமாற்ற கொண்டு வந்த போது, போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி செய்த சம்பவம் - போலீசார் அதிர்ச்சி
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த நபரின் 15 வயது மகள், அதே பகுதியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சூளை அங்காளம்மன் கோவில் அருகே அழுதபடியே அமர்ந்திருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பவானி என்பவர் சிறுமியிடம் விசாரித்தார். பள்ளி சென்ற போது, ஆட்டோவில் வந்த மூன்று பெண்கள் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் பெற்றோருக்கும், ஓட்டேரி போலீசாருக்கும் பவானி தகவல் தெரிவித்தார். மாணவியை மீட்ட போலீசார், கடத்தப்பட்டதாக சிறுமி சொன்ன இடத்திற்கு சென்று 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி கூறியது பொய் என தெரிய வந்தது. மாணவியையும், அவரது தந்தையையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், தேர்வுக்கு பயந்து சிலர் கடத்திச் சென்றதாக மாணவி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிக்கு கவுன்சிலிங் அளித்த போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கன்டெய்னர் லாரி மோதி பலி
சென்னை மணலி புதுநகர், துவாரகா நகரைச் சேர்ந்தவர் சாந்தி ( வயது 55 ) இவர் காலை நேரத்தில் டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், மணலி புது நகரில் இருந்து மணலி நோக்கி சென்றுள்ளார். பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி - வைக்காடு சந்திப்பு அருகே சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி, கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, பெரம்பலுாரைச் சேர்ந்த மோகன்ராஜ் ( வயது 27 ) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த இளம் பெண் கைது
சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் தெரு - விபி ராமன் சாலை சந்திப்பில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையை சேர்ந்த பாரதி ( வயது 32 ) என்ற பெண்ணை ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.