சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் மெட்ரோ ரயில் பயண அட்டை வாங்கினால் 20% தள்ளுபடி வழங்கப்படும் என மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது. சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் பெறும் பயன்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற்றுள்ளன.


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் : தீவுத்திடல் பொருட்காட்சியில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை அரங்குகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.


சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக முகப்பு போலவே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த அரங்கத்தின் உள்ளே நுழையும்போது மெட்ரோ ரயிலில் ஏறுவது போலவும், அரங்கத்தை பார்வையிட்டுவிட்டு வெளியில் வரும்போது மெட்ரோ ரயில் சுரங்க பாதை தோண்டும் பிரம்மாண்ட இயந்திரத்தின் மாதிரி வடிவம் வழியாக வெளியேறும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் எப்படி இயங்குகிறதோ அதேபோல் இந்த அரங்கம் இயங்குவதும் சிறப்பு.


அரங்கின் உள்ளே சென்னை மெட்ரோ இரயில் பற்றிய பல்வேறு புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் கட்டம்-2 இன் வரைபடம் போன்றவை அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரங்கில் சென்னை மெட்ரோ இரயில் பற்றிய தகவல்கள் செய்திகள் தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


மேலும், இந்த கண்காட்சியில் திருமயிலை மெட்ரோ இரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் மத்தியில் பிரமிப்படைய செய்கிறது. அதோடு இந்த கட்டிட அமைப்பு சவாலான பணியாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


மெட்ரோ ரயில் பற்றிய புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைபடம் போன்றவை இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக அரங்கில் பயண அட்டை விற்கப்படுகிறது.


பயண அட்டை வாங்குவோருக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவரை 183 பயண அட்டைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீரூற்று கிணறு இயற்கையாகவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக முன்பகுதியில் அமைந்துள்ளது. அதன் சிறப்பை எடுத்து கூறும் வகையில் இளைஞர்கள் கிணறு பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.