செங்கல்பட்டில் 25 சதவீத மானியத்துடன் மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தமிழக அரசின் சிறப்பு திட்டம்
மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு மானியம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 'வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டும் மையங்கள்" திட்டத்தின் கீழ் மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர்.
ஆதி திராவிடர் தொழில் முன்னேற்றத்தில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் பொது பிரிவினர்கள் ஆகியோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய தனியுரிமை, கூட்டாண்மை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா ஐஏஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இத்திட்டத்தில் புதிய மதிப்புக் கூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுவதோடு தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த தொழில்களான நவீன அரிசி ஆலை, வேர்கடலை மதிப்புக் கூட்டும் ஆலைகள், சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள், பழக்கூழ் குழைமங்கள் தயாரிக்கும் ஆலைகள், காய்கறிகள் பதப்படுத்தும் கூடங்கள். ஜவ்வரிசி ஆலைகள் சமையல் மசாலாக்கள் தயாரிக்கும் ஆலைகள் போன்ற வேளாண்/தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும்.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் என்னென்ன ?
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கான பயிற்சி மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படுவதோடு மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைப்பதற்குரிய உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance) முறையின் கீழ் பெற்றுத் தரப்படும்.
மானியங்கள் எவ்வளவு வழங்கப்படுகிறது ?
இத்திட்டமானது ரூபாய் 10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதம், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் இதில் எது குறைவாக உள்ளதோ அவை மானியமாக வழங்கப்படும். இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ. 200 கோடி வரை (CGTMSE) வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5% ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். மேலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏற்கனவே நிதி உதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என்ன ?
கூடுதல் விபரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) செங்கல்பட்டு அவர்களை 9080640338 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது ddab.chengalpattu2023@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3.ஆம் தளம் B.பிளாக் இல் செயல்படும் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), செங்கல்பட்டு அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.